Sunday, 27 November 2011

ஆடைகள் – இஸ்லாமியப் பார்வையில்…

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரவர்கள் உடுத்தும் ஆடையானது எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதினை பற்றி இஸ்லாம் நமக்கு போதிக்கிறது. நமது உடைகள் அழகாக இருப்பது பற்றியும் பிறர் பார்த்து பாராட்டும் வித்திலும் அணிவது ஏற்கத்தக்கதுதான்.
‘யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புகமாட்டார்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘நிச்சயமாக ஒரு மனிதன் தனது உடையும் தனது காலணியும் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்’ என ஒரு மனிதர் கேட்டார்.
(அதற்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகானதையே அவன் விரும்புகிறான். பெருமை என்பது, உண்மையை மறுப்பதும், மனிதர்களை கேவலமாகக் கருதுவதுமாகும் என்றனர். ஆதாரம்: முஸ்லிம். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹீ அன்ஹு
ஆண்கள் உடுத்தும் ஆடைகளானது, அவரவர்கள் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றபடியும் காலநிலைக்கு ஏற்றபடியும் மாறி இருக்கும். குறிப்பாக தமிழ் நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் கைலியினையும், வடமாநில இளைஞர்கள் பைஜாமா குர்தா, அரேபிய இளைஞர்கள் கந்தூரா (நீண்ட வெள்ளை அங்கி) மற்றும் மேலைநாட்டு இளைஞர்கள் பேண்ட் மற்றும் சட்டையினை விரும்பி அணிவார்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான். தற்போது கைலி கட்டும் பழக்கமானது நமது அண்டைய நாடான பங்களாதேஷ் நாட்டு இளைஞர்களையும் மிகவும் கவர்ந்து உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த ஆடையினை நாம் அணிந்தாலும் பிறரின் கவனமானது நமது ஆடையிலோ அல்லது நாம் உடுத்தும் ஆடையின் நிறத்தினை கண்டோ கெட்ட எண்ணங்களை தூண்டக்கூடியதாக இருக்க கூடாது. ஆகையால் தான் இஸ்லாமிய மார்க்கமானது தூய வெண்மையான ஆடைகளை அதிகமான அளவில் உடுத்துங்கள் என்று கூறுகிறது.
தற்போதைய மாறி வரும் சூழ்நிலையால், இளைஞர்களையும் மற்றும் இளைஞிகளையும் டீ சர்ட் புரட்சியானது அவர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு விட்டது. டீ சர்ட் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் மேலைநாட்டு கலாச்சாரத்தினை நாம் குறை கூறலாம். அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அவர்கள் டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிவார்கள். அதனை பார்த்த நம் மக்களும் மேற்குறிப்பிட்ட மேலை நாட்டு ஆடைகளுக்கு மாறி விட்டனர். மேலை நாட்டில் அதிகமான மாதங்கள் குளிராகவே இருக்கும். அந்த தட்பவெப்பநிலைக்கு தக்க மாதிரி தான் அவர்கள் ஆடையினை உடுத்துவார்கள். ஆனால் நம்முடைய இந்தியாவின் பருவ நிலைக்கும் இங்கு அடிக்கும் வெயிலுக்கும் ஒத்து வராத ஜீன்ஸ் ஆடைகளையும் மற்றும் நம்முடைய உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத பல இறுக்கமான ஆடைகளையும் நாம் அதிகமாக உடுத்துகிறோம்.
டீ சர்ட் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை.. அதில் கூட என்னனென்ன அலங்கோலங்கள் இருக்கிறது என்பதினை நாம் பார்த்தால் கண்றாவியாக இருக்கும். பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யும் அளவிற்கு பல கலர்கள், பல கெட்ட கெட்ட வாசகங்கள், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ரஸ்ஸிலின் போட்டோக்கள், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று எல்லா நட்சத்திரங்களின் படங்கள் போட்டதாக இருக்கும். இது ஆண்கள் உடுத்தும் டீ சர்ட் என்பது மட்டுமில்லை, பெண்கள் உடுத்தும் டீ சர்ட்டிலும் இத்தகைய அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அது போல் ஜீன்ஸை எடுத்து கொண்டால், பல வண்ணங்கள்..பல வடிவங்கள்.. ஒரு பக்கம் கிழிந்து போய் இருக்கும் ஒரு பக்கம் கலர் மங்கிப்போய் இருக்கும். ஒரு வயதான முதியவர் தன்னுடைய பேரனிடம் இப்படி கேட்கிறார்.. என்ன பேரான்டீ. நீ வாங்கிட்டு வந்த பேண்ட் துணி (அவருக்கு ஜீன்ஸ் என்று சொல்ல தெரியவில்லை..) கிpழிந்து தொங்குது.. அதற்கு பேரனின் பதில்.. போங்க.. தாத்தா.. உங்களுக்கு எப்பவும் ஒரு கிண்டல் தான்.. இது தான் இப்போது ஃபேஷன் தாத்தா என்பான்.
ஒரு இளைஞியிடம் ஒரு முதியோர்.. என்னபுள்ளையாக இருக்கிறாய் நீ.. ஆம்பிளை புள்ளை போடுற பேண்டை போட்டுக்கொண்டு திரிகிறாய்.. அந்த இளைஞியின் பதில்.. போங்க பெரிசு.. உங்க காலத்தில் இதுவெல்லாம் எங்கே கிடைத்தது.. எங்க காலம் வேற.. நாங்க நாகரீக காலத்தில் மாறி விட்டோம்.. இப்பாவெல்லாம் இது தான் எங்களுக்கு பிடிச்சு இருக்குது.. வேணும் என்றால் உங்களுக்கும் வாங்கி தரட்டா.. என்றுசொல்வாள்.. என்ன செய்வது.. காலங்கள் மாறிவிட்டது.. மாற்றங்கள் அவசியமானது தான். ஆனால் அது நாகரீகத்தினை குப்பைக்கு கொண்டு சென்றால் என்ன செய்வது..?..!
இதுமட்டுமல்லாமல், தற்போது பல கடைகளில் ஷார்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரைக்கால் டவுசர்கள் விற்பனைக்கு வந்து விட்டது. அதனையும் விரும்பி அணியக்கூடிய பலரை நாம் பார்த்து இருக்கலாம். அந்த ஆடையானது முழங்கால் தெரியக்கூடிய அளவிலும் மற்றும் தொடைகள் தெரியக்கூடிய அளவிலும் தான் இருக்கும். இத்தகைய ஆடைகளை அணியக்கூடியவர்கள் இளைஞிகளும் தான். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ இத்தகைய ஆடைகளை அணிவதை தடை செய்து உள்ளது. நாம் அணியும் ஆடையானது, நம்முடைய கணுக்கால் மேல் இருக்கவேண்டுமே தவிர கணுக்காலுக்கு கீழே இருக்கக்கூடாது என்றும், மற்றும் தொடைப்பகுதிகளையும் காலின் மற்ற பகுதிகளையும் மறைக்கக்கூடிய அளவிலும் தான் இருக்க வேண்டும். மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்கவிடுவதற்கல்ல..
கல்லுரியியை சுற்றி
கன்னிகளின் கூட்டம்..
பின்னர் தான் தெரிந்தது
அது
ஆண்கள் கல்லுரி என்று..
நவ நாகரீக
நங்கைகள் வளருவதால்
பாவாடைகளின்
அளவு குட்டையாகி
குறைந்து விட்டது..
எனக்கு பிடித்த கவிதை வரியானது தற்போது நினைப்பு வருகிறது. ஏனென்றால் இன்றைய பல இளைஞிகள் கல்லுரிக்கு செல்கிறார்களோ இல்லை.. அவர்களுக்கு பிடித்தமான இளைஞர்களுடன் தான் அதிகம் சுற்றி வருகிறார்கள். அவர்கள் உடுத்தும் ஆடைகளை இவர்கள் உடுத்துவதும், இவர்கள் உடுத்தும் ஆடைகளை அவர்கள் உடுத்துவதும் இன்னொரு நாகரீகமாக மாறி விட்டது. ஆண்கள் பெண்களை போல் ஒப்பனைகளை செய்வதையும், பெண்கள் ஆண்களை போல் ஒப்பனைகள் செய்வதையும் இஸ்லாம் ஒரு காலத்திலும் அனுமதிப்பதும் இல்லை மற்றும் இவ்வாறு செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் இஸ்லாமிய பெண்களுக்காக வேண்டி, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பல ஆடைகளானது தற்போது விற்பனைக்கு வந்து விட்டது. வளர்ந்து வரும் நாகரீகத்தில் அங்குள்ள மார்க்கப்பற்றுள்ள பெண்கள் தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்கிறார்கள். அங்குள்ள இஸ்லாமிய பெண்கள் அதிகமாக உடல்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இதற்காகவும் உடைகள் தனியாக தயார் செய்யப்படுகிறது. உளரீதியாகவும் பயிற்சியினை அந்த பெண்கள் மேற்கொள்கிறார்கள் எப்படியென்றால் அங்குள்ள பிஸியான சூழ்நிலையிலும் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தினை வீணாக்காமல் மாற்று மத பெண்களிடம், இஸ்லாத்தினை பற்றி எடுத்து சொல்கிறார்கள். குறிப்பாக அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்களிடம் அவர்கள் உடுத்தும் ஆடையினை பற்றியும், அநாகரீக மற்ற முறையில் ஆடைகளை உடுத்தும் பெண்களிடம் பக்குவமாக சொல்லி நல்ல முறையில் ஆடைகளை உடுத்துங்கள் என்று சொல்கிறார்கள்.
நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு அது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள், இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடைவனாக இருக்கின்றான். சங்கைமிகு அல்குர்ஆன் 33:59
உடல் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சியினை இங்கிலாந்து நாட்டு முஸ்லிம் பெண்கள், ஐந்தில் ஒரு முஸ்லிம் பெண் என்ற விகிதாசாரம் என்ற அடிப்படையில் உடல் பயிற்சியினை மேற்கொள்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு வேண்டி நாகரீகமான முறையில் உடல்கள் பிறருக்கு தெரியாத வண்ணம் வடிவமைக்கப்பட்ட பல ஆடைகளானது, சந்தைகளில் விற்பனைக்கு வந்து விட்டது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில், ஆடை விற்பனரான ஆஹிதா ஜனாத்தி என்ற இஸ்லாமிய பெண்மணி உருவாக்கிய பிரத்தியேகமான அதாவது உடல் முழுவதும் மறைக்கக்கூடிய நீச்சல் உடையினை ஆஸ்திரேலியா மாடல் அழகியான மேக்கா லாலா என்பவர் விரும்பி அணிந்து அங்குள்ள பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், இஸ்லாமிய பெண்மணிகள் இன்றைய சூழ்நிலையில் உடல் பயிற்சியினையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும், தற்காப்பு போன்ற பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும், இத்தகைய பயிற்சியினை மேற்கொள்ளும் போது அடுத்தவர்களின் எண்ணங்களை தூண்டும் அளவிற்கு உடைகளை மேற்கொள்ள கூடாது என்றும் கூறினார். இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் புர்கா, ஹிஜாப் என்னை மிகவும் கவர்ந்து உள்ளது என்றும் அவர் கூறினார்.
சிட்னி நகரில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த விளையாட்டு மற்றும் நீச்சல் உடை கடையும் உள்ளது. இந்த கடையை நோக்கி பல வெளிநாட்டு பெண்கள் பல ஆடைகளை வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ளும் பெண்கள் இது நாள் வரை நாம் கவர்ச்சியினை விரும்பினோம், இப்போது எங்கள் மனம் அதனை தவறு என்று உணருகிறது என்று சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ஆடைகள் எங்களுக்கு பிடித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்கள்.
ஆடை அணிகின்ற போது கூறப்படும் துஆ உள்ளது என்பதும் நமக்கு தெரிந்தது தான், இருந்தாலும் இங்கு அதனை குறிப்பிட வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.. தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக,
ஆடை அணிகின்ற போது (கூறப்படும் துஆ)
அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா(ஸஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.
பொருள்: இந்த ஆடையானதை (அவனுடைய உதவியோடு) என்னிடமிருந்து எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனை அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக..!
நூல்கள் : நஸாயீ தவிர அஹ்லுஸ்ஸுனன் இதனைப்பதிவு செய்திருக்கிறார்கள். இர்வாவுல் கலீல். பாகம் 7 பக்கம் 47
அத்துடன் ஆடையினை களையும் போது கூற வேண்டியது துஆ..
பிஸ்மில்லாஹ்

No comments:

Post a Comment