Thursday, 24 November 2011

ஓராயிரம பூககள

இறைத்தூதர் அவர்கள் மார்க்கப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது எண்ணற்ற துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. உற்றார், உறவினர்கள்கூட அண்ணலாரைத் துன்புறுத்தினர். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் அந்தத் தூயவர் யார் மீதும் பழி சுமத்தவில்லை; எவரையும் குற்றங்குறை சொல்லவில்லை; எதிரிகளைச் சபிக்கவுமில்லை. மாறாக, அந்தப் பகைவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்தார். இறைவனின் அருளைப் பெற வேண்டும்,
அவனுடைய வெறுப்பிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்ற உணர்வுகளைத்தான் அந்தப் பிரார்த்தனைகளில் பார்க்கிறோம்.
அண்ணல் நபி தளரா உறுதி நிறைந்தவர்; இறைவன் மீது ஆழமான நம்பிக்கைகொண்டவர் என்பதையும் அவருடைய பிரார்த்தனைகளே சொல்லாமல் சொல்கின்றன.
உளத்தூய்மையும் நல்லொழுக்கமும் அண்ணலாருக்கு எத்துணைப் பிடித்தமானவையாக இருந்தன என்பதையும் அவருடைய பிரார்த்தனைகளில் காணலாம். உள்ளத்தில் தலைதூக்கக்கூடிய தீமைகளான கோழைத்தனம், கஞ்சத்தனம், கபடம், பேராசை போன்றவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடுவார்.
அதே போல் சிறந்த ஒழுக்கப் பண்புகளுக்காகவும் பிரார்த்திப்பார். எளியவர்கள் மீது அன்பு காட்டும் உள்ளத்தைக் கேட்பார். ‘என் பார்வையில் என்னைச் சிறியவனாக்கு; பிறர் பார்வையில் என்னைக் கண்ணியமானவன் ஆக்கு’ என்று இறைஞ்சுவார். தூய்மையான உள்ளத்தை அருளும்படியும் உண்மையைச் சொல்லும் நாவை வழங்கும்படியும் புறத்தைப்போலவே அகத்தையும் அழகாக்கும்படியும் வேண்டிக்கொள்வார். இதுபோல் ஒவ்வோர் உயர் பண்பையும் பெயர் சொல்லிச் சொல்லி அதைத் தமக்கு அருளும்படி இறைவனிடம் இறைஞ்சுவார்.
இந்தப் பிரார்த்தனைகளில் சிலவற்றில் மற்றொரு சிறப்புக் கூறும் உண்டு. திடீரென்று எதிர்பாராமல் ஏற்படும் சோதனைகளின் போதும் வேதனைகளின் போதும் திடீர் மகிழ்ச்சிகளின் போதும் மனத்தை உறுதியாக நேர்வழியில் நிலைநாட்டி வைப்பதற்கும், இதயத்திற்கு அமைதி நல்கவும் இந்தப் பிரார்த்தனைகள் துணை செய்கின்றன.
இந்த இறைஞ்சுதல்கள், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துகின்றன. இறைவனின் திருமுன் கைகளை ஏந்தி, இதயம் உருகி, கண்கள் கசிய பிரார்த்திக்கும்போது நெஞ்சில் ஓராயிரம் பூக்கள் பூத்ததுபோல் அமைதி பூக்கிறது.
மனநிறைவு, மகிழ்ச்சி, அமைதி ஆகியவை இந்தப் பிரார்த்தனைகளில் பொதிந்துள்ளன. அண்ணலாரின் பிரார்த்தனைகளிலிருந்து பலன் அடைபவர்கள் உண்மையில் பாக்கியசாலிகளே!

No comments:

Post a Comment