Sunday, 22 January 2012

தானே’ புயல் நிவாரண நிதி: ரூ.19.81 கோடி திரண்டது

சென்னை: தானே புயல் நிவாரண நிதியாக 19 கோடியே 81 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 30 ம்தேதி வங்கக் கடலில் உருவான தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவியத்தொடங்கியுள்ளது. 

19 கோடி திரண்டது

புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரணத் தொகையில் ஜன.20ம் தேதி வரை ரூ.19,81,22,769 சேர்ந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 5 January 2012

ஆப்கானில் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்


Sahar Gul

காபூல்: விபச்சாரத்திற்கு இணங்க மறுத்த 15 வயது புதுமணப் பெண்ணை கடந்த 5 மாதங்களாக கழிவறைக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படு்ததிய அவரது மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாஹர் குல்(15). அவருக்கும் பக்லான் மாகாணத்தைச் சேர்ந்த குலாம் சாகி(30) என்னும் ராணுவ வீரருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணை குலாம் வீட்டார் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க நினைத்தனர். இதனால் குல்லை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர்கள் குல்லை சிகரட்டால் சுட்டும், உருட்டுக் கட்டையால் அடித்தும், கை நகங்களைப் பிய்த்தும், முடியைப் பிடித்து இழுத்தும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குல்லை வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கழிவறையில் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைத்து அவருக்கு போதிய உணவு கூட கொடுக்காமல் பாடாய் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பக்லான் மாகாண போலீசார் வீட்டின் கதவை உடைத்து குல்லை காப்பாற்றினர். உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த குல்லை காபூலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீட்கப்பட்டு 6 நாட்களாகியும் குல்லின் ஒரு கண் வீங்கி மூடிக் கொண்டுள்ளது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவரது கணவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி்த் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சு - இணக்கமின்றி முடிந்தது.


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஜோர்தானில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் பலஸ்தீன் இஸ்ரேல் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.